வெளிமுகமை மூலம் அரசு நிறுவனத்தில் ஆட்களை நியமிப்பது பணியாளர் விரோதக் கொள்கை - ஓ. பன்னீர்செல்வம்
வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வீட்டு மனைகள், வணிக மனைகள் வாங்குபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமம் அமைக்கப்பட்டு, இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) விதிகள் உருவாக்கப்பட்டன. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், சட்டரீதியான அமைப்புகள் போன்றவற்றில் உள்ள பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவித்தது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான வகையில், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள் போன்றவற்றில் உள்ள பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, வெளிமுகமை மூலம் பணியாளர்களை நியமிக்கும் முறையை தி.மு.க. அரசு கடைபிடித்து வருகிறது. இதனைக் கண்டித்து நான் பல அறிக்கைகள் விடுத்துள்ளேன். இருப்பினும், இதனை தி.மு.க அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக, தனியார் மூலம் ஆட்களை நியமிக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமத்தின் (Tamil Nadu Real Estate Regulatory Authority) அலுவலகப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, சட்ட ஆலோசகர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் மனித வள நிறுவனங்களை தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் தேர்வு செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது.
இளைஞர்கள் படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில், அண்மையில் தொகுதி 4 காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள நிலையில், அவற்றில் வெற்றி பெற உள்ள இளைஞர்களைக் கொண்டு தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுதான் பொருத்தமாகவும், முறையாகவும் இருக்கும். இதற்கு மாறாக, வெளிமுகமை மூலம் அரசு நிறுவனத்தில் ஆட்களை நியமிப்பது என்பது பணியாளர் விரோதக் கொள்கை.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திற்குத் தேவையான பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும், வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்யவும் முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.