நெல்லையில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.;
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தாமிரபரணி டெப்போ முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து சிஐடியு சங்கம், விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின்போது, திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்சன் திட்டத்தை அறிவித்திட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் 23 மாத ஓய்வூதிய பலன்கள், மருத்துவ காப்பீடு, முழுமையான அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். தனியார்மயம், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். 8 ஆண்டுகளாக காத்திருக்கும் வாரிசு பணியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த தர்ணா போராட்டத்துக்கு சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மண்டல பொதுச்செயலாளர் ஜோதி தலைமை வகித்தார். எஸ்இசிடிசி ரேவா சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன், துணைத் தலைவர் வன்னியபெருமாள், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பின் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோமதிநாயகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல தலைவர் காமராஜ், எஸ்இசிடிசி துணை செயலாளர் அருண், டிஎன்எஸ்டிசி தூத்துக்குடி பொறுப்பாளர் கண்ணன், துணைத் தலைவர் மரிய ஜான் ரோஸ் எஸ்இசிடிசி-1 கிளைச் செயலாளர் முருகன், துணை பொதுச்செயலாளர் அமல்ராஜ், எஸ்இசிடிசி-2 கிளை செயலாளர் பொன்ராஜ் துணைத்தலைவர் மணி, முன்னாள் கிளை மேலாளர் கிருபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். சங்க மாவட்ட பொருளாளர் சங்கிலி பூதத்தான் நன்றி கூறினார். இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.