சௌரிபாளையம் மரிய மதலேனாள் ஆலய தேர் பவனி

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்கள் ஆலயத்தை சுற்றி பவனி வந்தன.;

Update:2025-07-23 15:47 IST

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த சௌரிபாளையம் பகுதியில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புனித மரிய மதலேனாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் திருத்தேர் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு 13.07.2025 அன்று கொடியேற்றத்துடன் திருத்தேர் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து 14ம் தேதி திருப்பலி நிகழ்ச்சியும், 18ம் தேதி நவநாள் திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.

திருப்பலி வரவேற்பு, ஆடம்பர திருப்பலி, ஜெப வழிபாடு, கூட்டுப் பாடல் திருப்பலியைத் தொடர்ந்து இரவில் குணமளிக்கும் ஜெப வழிபாடும் நடந்தது. தேவாலாயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மெழுகுவர்த்தி, புனித எண்ணை விளக்கு வைத்தும் புனித மரிய மதலேனாளை வழிபட்டனர். தொடர்ந்து புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனிதமைக்கேல் சம்மன்சு ஆகிய சிலைகள் கொண்டு வரப்பட்டு அந்தந்த தேரில் அமர்த்தப்பட்டன.

பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனித மைக்கேல் சம்மன்சு ஆகியோர் எழுந்தருளி ஆலயத்தை சுற்றி பவனி வந்தனர்.

இந்த திருவிழாவில் பங்கேற்று இந்த தேர்களை சுற்றி வலம் வந்து வழிபடும் மக்களின் மனக்குறைகள், மனகுழப்பம் நீங்குவதாகவும், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகள் நீங்குவதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் ஐதீகம். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். இன்று காலை 7 மணியளவில் நன்றி திருப்பலி மற்றும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்