ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு.. சிறுவாபுரியில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
ஏராளமான பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இன்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது.
இதனால் கோவிலின் பின்பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் மற்றும் திருக்குளத்தைச் சுற்றிலும் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செவ்வாய்க்கிழமை என்பதால் மூலவருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தரிசனம் செய்ய திருக்கோவிலின் செயல் அலுவலர் மாதவன் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், புதுரோடு கூட்டுச்சாலையில் இருந்தும், அகரம் கூட்டுச்சாலையில் இருந்தும் திருக்கோவிலுக்கு மினி பஸ்கள் போதிய அளவு இயக்கவில்லை. இதனால் இயக்கப்பட்ட குறைந்த அளவு மினி பஸ்களில் முண்டியடித்து ஏறி நின்று கொண்டே பக்தர்கள் பயணம் செய்தனர்.
இதுதவிர ஏராளமான பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக காலை முதல் இரவு வரை கூடுதல் மினி பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.