ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருள, புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வளையல் பூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2025-07-22 13:05 IST

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் உள்பிரகார உலா நடைபெற்றது.

விழாவின் 4-வது நாளான நேற்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்பாள் சன்னதி வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் வெண்பட்டு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளம் முழங்க சீர்வரிசைகளுடன் சுவாமி சன்னதி சென்று சுவாமி நெல்லையப்பரிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் எழுந்தருள புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வளையல் பூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் காந்திமதி அம்பாளுக்கு நலுங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு 8 மணி அளவில் காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடந்தது.

வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10-வது திருநாளில் மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்