முதல்-அமைச்சர் உடல்நிலை; வதந்தி பரப்பினால் நடவடிக்கை
அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்திய நிலையில், முதல்-அமைச்சர் அங்கு தங்கியுள்ளார். இதற்கிடையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.