மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார் என்று காவலர் செல்வம் கூறி இருந்தார்.;
சென்னை,
மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் சீருடையுடன் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மேலும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தன் மீது உயர் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக டிஎஸ்பி சுந்தரேசன் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் 9 பேரிடம் விசாரணை நடத்தினார். மேலும் விசாரணை அறிக்கையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் காவல்துறையிலும் அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் டிஎஸ்பி சுந்தரேசன் காவல்துறைக்கு விசுவாசமாக இல்லை, மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவை டிஎஸ்பி சுந்தரேசன் மதிக்காமல் பலமுறை நடந்துக்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், டிஎஸ்பி சுந்தரேசன் மீது லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் செல்வம் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் கிண்டி காவல் நிலையத்தில் இருந்து கான்ஸ்டபிள் செல்வம் பேசுகிறேன். 1997இல் காவல்துறை பணியில் இணைந்தேன். கடந்த 28 வருடங்களாக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறேன். 2009ல் இருந்து 2012 வரைக்கும் டிஎஸ்பி சுந்தரேசன் ஐயா ஜே5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரிடம் நான் ஓட்டுனராக இருந்ததாக கூறியுள்ளார்.
இதுவரை 12 இன்ஸ்பெக்டருக்கு ஓட்டுநராக இருந்துள்ளேன். அதில் வித்தியாசமானவர் நேர்மையானவர் உண்மையானவர் அப்படி சொன்னால் ஆய்வாளர் சுந்தரேசன் ஐயா தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் காவல்துறையில் உண்மையானவர்கள் கிடைப்பது பெரிய விஷயம். ஹோட்டலில் சாப்பாடு வாங்கும் போது கூட காசு கொடுத்து தான் வாங்கி வர சொல்வார். அதுமட்டுமல்ல நீ வேண்டியதை வாங்கி சாப்பிடு என்று கூறுவார். சொந்த பணத்தை தான் செலவு செய்வார். அவரிடம் கையூட்டல் பெறுவது கிடையவே கிடையாது.
அவரு கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார். உண்மையாக இருப்பதால் கொஞ்சம் கோவமாக பேசுவார். சிங்கம் என்றாலே என்றைக்கும் சீற்றம் இருக்கதானே செய்யும். உண்மையிலேயே நான் அவரோடு பணியில் இருந்திருந்தால் சாதகமாக பேசியிருப்பேன். அவர் தனியாக சொல்வதால் பொய் ஆகாது. உண்மைதான் சொல்வார், உண்மையாகத்தான் இருப்பார். அவர் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார். ஏனென்றால் எந்த அதிகாரி கிட்டையும் அவர் நேர்மையாக இருப்பதால். மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். அவரை இந்த அரசு கவனிக்கா விட்டாலும் பரவாயில்லை கடவுள் கண்டிப்பாக அவர் பக்கம் இருப்பார். அவர் உண்மை ஜெயிக்கும் வெல்வார் என அதில் கூறி இருந்தார். இந்தநிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட கிண்டி காவல் நிலைய காவலர் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.