தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது

வாலிபர் ஒருவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ரவுடி, அந்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.;

Update:2025-07-22 21:20 IST

தூத்துக்குடி, ராம்தாஸ்நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த கார்த்திக் (வயது 27), தொழிலாளி. இவர் கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி(25) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு போலீசார் வந்தனர்.

இதனால் ராஜபாண்டி மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். திடீரென அங்கு போலீஸ் வந்ததற்கு கார்த்திக்தான் காரணம் என்று ராஜபாண்டி கருதி உள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கார்த்திக் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டி, அரிவாளால் கார்த்திக்கை வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் கார்த்திக் தப்பி சென்றதால், வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக்கை ராஜபாண்டி சேதப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜபாண்டியை, சிப்காட் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு முதல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர். இவர் மீது சிப்காட் போலீசில் 7 வழக்குகளும், தென்பாகம் போலீசில் 9 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்