செந்தில் பாலாஜி சகோதரர் வெளிநாடு செல்ல எதிர்ப்பு
அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.;
சென்னை,
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு ஆஜராகுமாறு 9 முறை அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் ஒருமுறை கூட ஆஜராகி ஒத்துழைக்கவில்லை எனவும் கூறினார்.
மேலும், அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் எதுவும் இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். இதற்கு, இல்லை என அமலாக்கத் துறை வழக்கறிஞர் பதிலளித்தார்.
இதனையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தகவல்களின் உண்மை தன்மை குறித்து அமலாக்கத் துறை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.