சேலத்தில் பணம்கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேரை மீட்ட போலீசார்
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியது;
தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் பலரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியை சேர்ந்த 6 தொழிலாளர்கள் (இர்பான் அன்சாரி, ஜாகீர் அன்சாரி, கிஸ்மத் அன்சாரி, அர்பாஸ் அன்சாரி, இஷாத் அன்சாரி, அல்பாத் அன்சாரி) மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பணம் கேட்டு வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளது. மிரட்டலுக்கு பயந்து வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினர் 30 ஆயிரம் ரூபாய் அந்த கும்பலுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜம்தாரா தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில சுகாதாரத்துறை மந்திரியுமான இர்பான் அன்சாரி தமிழக டிஜிபி, தலைமை செயலாளரை டேக் செய்து கடத்தப்பட்ட 6 பேரையும் மீட்கும்படி எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலம் போலீசார், பணம் கேட்டு கடத்தப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களையும் மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிய நிலையில் அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளார்.