கொடிக்கம்பம் இடையூறு என்றால்..சிலை இடையூறு இல்லையா? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.;
சென்னை,
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? சாலையில் இருக்கும் கொடிக்கம்பங்கள் இடையூறு ஏற்படுத்துகின்றன என்றால், சாலையில் இருக்கும் சிலைகளும் இடையூறு தானே? அதை ஏன் அகற்றவில்லை? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், செளந்தர், விஜயகுமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். இடையீட்டு மனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.