இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்: எடப்பாடி பழனிசாமி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின்போது அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே மு.க.ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி விழுப்புரத்தில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நட அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வளவு அசிக்கப்பட்டும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்... அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்' என்றார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல்; மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்தின் தெருக்களில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. சட்டத்திற்கு புறம்பான கைது நடவடிக்கைகளுடன், அவர்களை சட்டவிரோத குடியேறிகளாக முத்திரை குத்த முயற்சிகள் நடக்கின்றன என அக்கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 18.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: ஒயர் லெஸ் ஸ்டேஷன் , ஆர்.இ நகர் 5வது தெரு , ஜெயா பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1 முதல் 7வது அவென்யு, ரம்யா நகர், உதயா நகர் , குருசாமி நகர் , ராஜராஜேஸ்வரி நகர் , சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
பெசன்ட் நகர்: கங்கை தெரு, அப்பர் தெரு, அருந்தாலே கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, கடற்கரை சாலை, திருமுருகன் தெரு, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ருக்குமணி சாலை, ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன், பாரி தெரு, பயண்டியம்மன் கோயில் தெரு, கம்பர் தெரு.
தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி நீலகிரி, கோவை , திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், ஈரோடு, கரூர், கன்னியாகுமரி , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் 53 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் வழக்கம் போல இன்று காலை மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் என 9 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு 9 மாணவிகளும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கழிவறை பற்றாக்குறை விவகாரம்; ஐகோர்ட்டுகளை கடிந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரித்தபோது, இதற்காக வேதனை தெரிவித்தனர். இந்தியாவின் அனைத்து கோர்ட்டு வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என கூறி அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்க 8 வார கால அவகாசமும் அளித்துள்ளனர்.
அப்படி, அடுத்த 8 வாரங்களில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் அமர்வு கடுமையாக குறிப்பிட்டுள்ளது.