தற்காலிக பேராசிரியர்கள் ஒப்பந்தத்தை நீட்டிக்காத திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-07-16 20:33 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழகம் முழுவதுமுள்ள உயர்கல்வி நிலையங்களில் போதிய பேராசிரியர்களை நியமிக்காது இழுத்தடிக்கும் அவலத்திற்கு மத்தியில், தற்போது அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேரின் ஒப்பந்தத்தையும் நீட்டிக்காது திமுக அரசு அலட்சியம் காட்டிவருவது கண்டனத்திற்குரியது.

நிரந்தர பேராசிரியர்களை நியமித்து மாணவர்கள் நலனைப் பாதுகாக்கத் தான் அக்கறை இல்லை என்றால், ஒப்பந்தத்தை நீட்டித்து, தற்போது இருக்கின்ற பேராசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட மனமில்லையா? கிட்டத்தட்ட 332 தற்காலிக பேராசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தையும் வழங்காது காலந்தாழ்த்துவது ஏன்? தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா?

ஆக மொத்தத்தில், பள்ளிக்கூடங்களில் இருந்து உயர்கல்வி நிலையங்கள் வரை கல்வித்துறையைக் கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. என தெரிவித்தார் . 

Tags:    

மேலும் செய்திகள்