திருக்குறள் விவகாரத்தில் கவர்னருக்கு சம்பந்தம் இல்லை: டாக்டர் விளக்கம்

போலி திருக்குறள் விவகாரம், திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு என குற்றச்சாட்டு எழுந்தது.;

Update:2025-07-16 19:22 IST

சென்னை,

நாடு முழுவதும் கடந்த 13-ஆம் தேதி மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரக்கூடிய 50 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கினார்.

இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய சர்ச்சையாகி உள்ளது. திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருக்குறள் புத்தகத்தில் கவர்னர் மாளிகை தரப்பில் அச்சிட்ட குறளை தேடியபோது, 944 -என்ற எண் வரிசையில் அப்படி ஒரு திருக்குறள் இல்லை என்பது தெரிய வந்தது. அந்த திருக்குறள் ஒரு போலியான திருக்குறள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

கவர்னர் மாளிகை அச்சிட்ட திருக்குறள்:

செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. (திருக்குறள் 944)

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

இந்தநிலையில், கவர்னர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள் இடம் பெற்று உள்ளதற்கு பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கவர்னர் விருது வழங்கும் விழாவை ஒருங்கிணைத்த மருத்துவர் மோகன் பிரசாத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, போலியாக அச்சிடப்பட்ட திருக்குறள் விவகாரத்தில் கவர்னருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் எல்லாவற்றையும் திரும்ப பெற தமிழக கவர்னர் மாளிகை நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது என்றும் திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருதுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்