வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம்: போலி உதவி கலெக்டர் குறித்து பரபரப்பு தகவல்கள்
உதவி கலெக்டர் என வங்கி அதிகாரியை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா பெரியமணலி அருகே குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது29). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த தன்வர்த்தினி (29) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது, தன்வர்த்தினி பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணியாற்றுவதாக அவரது பெற்றோர் கூறினர். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் அவர் உதவி கலெக்டராக பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. இந்த குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நவீன்குமார் புகார் செய்தார். அதன்பேரில் தன்வர்த்தினியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே அவர் பொள்ளாச்சியில் தங்கி இருந்த வீட்டில் இருந்து மடிக்கணினி உள்பட சில ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருப்பினும் மடிக்கணினியில் உள்ள விவரங்களை கண்டறிய அதன் கடவுச்சொல் போலீசாருக்கு தெரியவில்லை. இதற்கிடையே போலி ஆவணங்களை தயாரிக்க யாராவது உதவி செய்து உள்ளார்களா? என்பதை கண்டறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் செகனாபானு, 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணையில், தன்வர்த்தினி குரூப்-1, 2 தேர்வுகளை எழுதி உள்ளார். ஆனால் அவற்றில் தேர்ச்சி பெறவில்லை. இதற்காக அவரே போலியாக உதவி கலெக்டர் நியமன உத்தரவு ஆணையையும், அடையாள அட்டையும் தயாரித்து உள்ளார் என்பது தெரியவந்தது.