ராயபுரத்தில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
போஜராஜன் நகரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.;
ராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதையினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.8.2025) ராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதையினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் மூன்று புறமும் ரெயில்வே இருப்புப் பாதையினால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரெயில்வே சந்திப்பு கடவின் மூலமே வெளியே செல்ல முடியும். மேலும் அவசர காலங்களில் அவர்களால் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே இங்கு வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, போஜராஜன் நகரில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதை (Limited Use Subway) அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
இச்சுரங்கப்பாதையின் நீளம் 207 மீட்டர் (ரெயில்வே பகுதி 37 மீட்டர் உட்பட), அகலம் 6 மீட்டர் ஆகும். மேலும், மழைக் காலங்களில் மழை நீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85HP திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளன. இப்பணியின் மூலம் போஜராஜன் நகர், சீனிவாசன் நகர் மற்றும் மின்ட் மார்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
மேலும், போஜராஜன் நகர் வாகனச் சுரங்கப்பாதையினையொட்டி 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டுத் திடல், ரவுண்டானா பூங்கா மேம்பாட்டுப் பணிகள், ரவுண்டானாவைச் சுற்றிலும் நடைபாதை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான ஓய்வுக்கூடம், ஆகியவற்றையும் துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே .சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.