மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் - செல்லூர் ராஜு
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று செல்லூர் ராஜு கூறினார்.;
மதுரை,
மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கொடிமங்கலம் அருகே உள்ள தாராப்பட்டி கிராமத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் மேற்கு தொகுதிக்கு என்ன செய்திருக்கிறேன் என மக்களிடம் கேளுங்கள். ஆரம்ப சுகாதார நிலையம் பொது நிதியில் கட்ட முடியாது என கூறியதால் என்னுடைய நிதியில் இருந்து 53 லட்ச ரூபாய் செலவில் கொடிமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டினேன். அதனை 24 மணி நேரம் செயல்படும் மேம்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற சுகாதார அமைச்சரிடம் கூறினேன். அமைச்சர் மூர்த்தி அங்கு கள ஆய்வு செய்ய வேண்டாமா?.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தல்லாகுளம் முதல் ஊமச்சிக்குளம் வரை ரூ.1100 கோடி செலவில் பறக்கும் பாலம் அமைத்தோம். இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் அமைச்சர் மூர்த்தி என்ன செய்தார்?. சுகாதாரத்தை பேணி காப்பதில் மதுரை மாநகராட்சி கடைசி இடத்தில் உள்ளது. மாநகராட்சி ஊழல் சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.