குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி - டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்தது.;
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி), எந்தெந்த துறைகளில் காலி பணியிடங்கள் இருக்கின்றன; அவற்றிற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதன்படி, வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. 3,935 பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் சுமார் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடைக் குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகாப்பில்லாமல், அட்டைப்பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும், முறையாக சீலிடப்படாமலும் இருக்கிற புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, முறையாக அட்டைப்பெட்டிகளில் போட்டு சீலிடப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும்.
ஆனால் சேலத்தில் இருந்து அனுப்பப்பட்ட பெட்டிகள் உரிய பாதுகாப்பின்றி அனுப்பப்பட்டதாக வெளியான புகைப்படங்களால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதில் கட்டுகள் பிரிக்கப்பட்டு, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "குரூப் 4 விடைத்தாள்கள் டிரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படாது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும். ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறுகையில், "குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14ம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்டது. டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே மதுரையில் பாதுகாப்பு இல்லாமல் கேள்வித்தாள்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையான நிலையில் இந்த சம்பவத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.