பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.;

Update:2025-07-22 16:38 IST

கடந்த 6.2.2025 அன்று, கர்ப்பிணி பெண் ஒருவர் கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பூரிலிருந்து சித்தூருக்கு பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்துகொண்டிருந்த போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஹேமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை அருகே ஓடிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 7.2.2025 அன்று ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் குற்றவாளி ஹேமராஜ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் 47 நாட்களில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு 2.5.2025 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் குற்ற வழக்குகள் தொடர்வு துறை ஆகியவற்றால் வழக்கின் நீதிமன்ற விசாரணையை விரைவுப்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 11.7.2025 அன்று ஹேமராஜ் "குற்றவாளி" என மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர், 14.7.2025 அன்று அவருக்கு "சாகும் வரை ஆயுள் தண்டனை" விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் தண்டனை கிடைக்க பணியாற்றிய விசாரணை அதிகாரிகள் மற்றும் குழுவினரை பாராட்டும் விதமாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்