'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை - திமுக சார்பில் முறையீடு

தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-07-22 12:52 IST


'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை என்றும், தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் தனது வாதத்தின்போது, "ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP பெறுவதாக தவறான தகவலை கோர்ட்டில் கூறி தடை உத்தரவை அதிமுகவினர் பெற்றுள்ளனர். ஆனால், உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறவே, செல்போன் எண் கேட்டு OTP பெறப்பட்டது. வேறு எந்த ஆவணமும் வாங்கவில்லை" என்று கூறினார்.

இதனை இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கம் மூலம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு, பொதுமக்களின் செல்போன் ஓ.டி.பி. தகவல்களை பெற தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. தரவுகள் பாதுகாக்கப்படுமா? என்பதை தி.மு.க. உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாக செல்கின்றனர். எங்கள் வீட்டுக்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்து, அனுமதி இல்லாமல் 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர்.

பின்னர் குடும்பத்தினர் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டனர். அதனை கொடுக்க மறுத்தபோது, வீட்டுப்பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிறுத்திவிடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.

அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறுவதாகும். பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜராகி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் வசிப்பவர்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உறுப்பினர் சேர்க்கைக்காக தி.மு.க.வினர் பெறுகின்றனர். அதன்பின் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். அதனை தர மறுத்தால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர்" என தெரிவித்தார். பின்னர் இதுதொடர்பான வீடியோவையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

இதனை பார்த்த நீதிபதிகள், "செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தனிநபர்களின் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை கேட்க வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "ஆதார் விவரங்களை தி.மு.க. சார்பில் சேகரிக்கும் தனியார் நிறுவனம், இந்த தகவல்களை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட்டால் என்ன செய்ய முடியும்? இந்திய மக்கள் இவ்வாறுதான் நடத்தப்படுவார்களா?" எனவும் கேள்விகளை எழுப்பினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், "உறுப்பினர் சேர்க்கைக்காக விவரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விவரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும்? என்பது தொடர்பான எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான பாதுகாப்பு விதிகள் தற்போது வரை ஏற்படுத்தப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது" என கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் தனித்தனி உத்தரவுகள் பிறப்பித்தனர். இதில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், "பல்வேறு அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கண்காணித்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்கலாம். ஆனால் சமீபகாலமாக அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை, பிரசாரங்கள் புதிய முயற்சியாகும். கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் வழக்கமான முறைகளில் இருந்து இந்த நடைமுறை முற்றிலும் விலகி இருக்கிறது.

தனிநபரின் தரவுகளை பெறுவதால் ஏற்படும் தாக்கம் என்பது இந்த பொது நல வழக்கில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கைக்கு பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த உறுப்பினர் சேர்க்கையின்போது பெறப்படும் தரவுகள் அனைத்தும் தனியுரிமை கொள்கையின்படி அமைந்து இருக்கிறதா? பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா? தனிநபர்களின் ஒப்புதலுடன் தகவல்கள் பெறப்படுகிறதா? என்பதை தி.மு.க. உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் பிற கட்சிகளையும், அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளையும் பாதிக்குமா? என்பதையும் ஆலோசிக்க வேண்டியது அவசியம். எனவே இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும் பொதுமக்களின் உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளன.

எனவே 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி. தகவல்களை பெறுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கில் மற்றொரு நீதிபதியான மரிய கிளாட் பிறப்பித்த உத்தரவில், "இந்த தனி உத்தரவு, நேரமின்மை காரணமாக சுருக்கமாக பிறப்பிக்கப்படுகிறது, ஏனெனில் சக நீதிபதி (எஸ்.எம்.சுப்பிரமணியம்) உத்தரவு நகலை இன்றே வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர் அரசியலமைப்பின் பிரிவு 226-ன் கீழ் இந்த கோர்ட்டை அணுகியுள்ளதால், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023-ன்கீழ் விதிமீறல்களை நிவர்த்தி செய்ய ஏதேனும் வழிமுறை அல்லது அதிகாரம் உள்ளதா? என்று மத்திய அரசு சார்பாக ஆஜரான வக்கீல் கோவிந்தராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இதுசம்பந்தமான சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்க அவகாசம் வேண்டும் என கூறி இருக்கிறார்.

இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் அளிப்பதற்கு முன்பாகவே சக நீதிபதி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்க விரும்பினார். ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்தரப்பினர் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்பது என் கருத்து.

அதாவது தனிநபர்களின் ஓ.டி.பி. தகவல்களை பெறுவது, தனிநபர்களின் தரவுகளை பாதுகாப்பது போன்ற விவகாரத்தில் சக நீதிபதியின் முடிவில் உடன்படுகிறேன். ஆனால் அவரது உத்தரவில் 9-வது பாராவில் தெரிவித்து உள்ள, இந்த உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையானது, மற்ற சிறிய அல்லது பொருளாதார ரீதியில் சிறிய அரசியல் கட்சிகளுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துமா? மேலும் அது தேர்தலில் சமநிலையை சீர்குலைத்து, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14-ஐ பாதிக்குமா என்பதையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன். இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்த பின்பு, விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்" என்று அவர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்