தேனி மாவட்டத்தின் 2-வது பெண் போலீஸ் சூப்பிரண்டாக சினேகா பிரியா பதவி ஏற்பு

சினேகா பிரியா தேனி மாவட்டத்தின் 17-வது போலீஸ் சூப்பிரண்டு ஆவார்.;

Update:2025-07-22 10:50 IST

தேனி,

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சிவபிரசாத், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதில், சென்னை போலீஸ் துணை ஆணையராக பணியாற்றிய டாக்டர் பி.சினேகா பிரியா, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் பி.சினேகா பிரியா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இவர், ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். அவர் மதுரை 6-வது பட்டாலியன் கமாண்டன்ட், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, மதுரை மாநகர் போலீஸ் துணை ஆணையர், தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, சென்னை போலீஸ் துணை ஆணையர் என பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவில், சினேகா பிரியாவும் இடம் பெற்று விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினேகா பிரியாவின் கணவர் பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக உள்ளார்.

சினேகா பிரியா தேனி மாவட்டத்தின் 17-வது போலீஸ் சூப்பிரண்டு ஆவார். இதேபோல், அவர் மாவட்டத்தின் 2-வது பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆவார். மாவட்டத்தின் முதல் பெண் போலீஸ் சூப்பிரண்டு பி.சி.தேன்மொழி ஆவார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு சுமார் 2 மாத காலம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்