முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் - உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை முதல்-அமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வார்' என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து பரிசோதனை முடிந்த நிலையில், தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் திரும்பினார். அப்போது அவர் காரின் முன்பகுதி இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அதன்பின்னர், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்று காலை முதல்-அமைச்சருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவர்கள் அறிக்கை அளிப்பார்கள். 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்-அமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.