வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட புகாரில் ஏ.சி. மெக்கானிக் கைது

வேலூரை சேர்ந்த இளம்பெண், வரதட்சணை கொடுமை தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.;

Update:2025-07-22 12:10 IST


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆம்புலன்சில் படுத்தப்படி வந்து நர்கீஸ் (வயது 21) என்ற இளம்பெண் மனு அளித்தார்.

இதுதொடர்பான அந்த மனுவில், "எனது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா, மேல்நெல்லி கிராமம் ஆகும். எனக்கு திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் காஜாரபீக் என்பவருடன் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் கணவர் குடும்பத்தினர் என்னை கேலி, கிண்டல் செய்து கொடுமை செய்ய தொடங்கினர். நான் குறைவான நகை போட்டு வந்ததாக கூறி துன்புறுத்தினர். என்னை வீட்டு வேலைக்கார பெண் போன்று நடத்தினர். மேலும் என்னை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.

இந்த பிரச்சினைகளுக்கு இடையே கணவருடன் வேலூர் சதுப்பேரி முல்லைநகரில் கடந்த பிப்ரவரி மாதம் குடியேறினேன். தொடர்ந்து மாமனார் தூண்டுதலின்பேரில் கணவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து தந்தையிடம் தெரிவித்தேன். இதனால் ஆத்திரத்தில் எனது கணவர், மாமனாருடன் செல்போனில் பேசியவாறு மொட்டை மாடிக்கு சென்றார்.

நானும் அவரிடம் எனது தந்தையிடம் எதுவும் கூறமாட்டேன் என்று தெரிவித்தபடி பின்னால் சென்றேன். அப்போது மொட்டை மாடியில் சுவர் ஓரத்தில் நின்றிருந்த என்னை, கணவர் திடீரென கீழே தள்ளிவிட்டார். இதனால் எனக்கு கால்களில் பலத்தகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். கணவர் வீட்டில் இருந்து இதுவரை யாரும் என்னை பார்க்கவரவில்லை.

எனக்கு சிகிச்சைக்காக ரூ.6 லட்சத்துக்கு மேல் செலவாகி விட்டது. அரியூர் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கணவர் கைது

அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜாரபீக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் காஜாரபீக் மெரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு, ஏ.சி. மெக்கானிக்காக வேலைபார்த்து வந்தது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்