நான் முதல்வன் திட்டம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு திட்டத்தை அறிவித்து விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது, அந்தத் திட்டம் மக்களை சென்றடைகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தி.மு.க. அரசு தனக்குத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நான் முதல்வன் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவது ஓர் அங்கமாகும். இந்தத் திட்டம் குறித்து மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டாலும், இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும், அதன்மூலம் வேலைவாய்ப்பினைப் பெறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதுதான் கள யதார்த்தம்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், 2023 ஆம் ஆண்டு மேற்படி திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பயிற்சி பெற்ற நிலையில், கிட்டத்தட்ட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றார்கள். இதே திட்டத்தின்கீழ் 2024 ஆம் ஆண்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 36,584 பேர் மட்டுமே. அதே சமயத்தில் வேலைவாய்ப்பினைப் பெற்றோர் வெறும் 8,517 பேர் மட்டுமே. 2025 ஆம் ஆண்டு இதுவரை வெறும் 11,865 பேர் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர். இதில் வேலைவாய்ப்பினைப் பெற்றோர் வெறும் 796 பேர் மட்டுமே. இதனைப் பார்க்கும்போது """"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை"" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. இந்தத் திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றோர் அனைவரும் தகுதிக்குரிய சம்பளத்தை பெறுகிறார்களா, அந்த வேலையில் தொடர்கிறார்களா என்பது கேள்விக்குறிதான் என்றாலும், திட்டத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து கொண்டே செல்வது இந்தத் திட்டம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தத் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர், முதல் ஆண்டில் பல தொழில் முனைவோர்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் தங்கள் நிறுவனங்களை பயிற்சி நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டு, கட்டமைப்பு இல்லாமலேயே அரசிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தராத நிறுவனங்களுக்குத் தர வேண்டிய 40 விழுக்காடு பணத்தினை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சில நேர்வுகளில் பயிற்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பினை பெற மறுக்கிறார்கள் என்றும், இதற்குக் காரணம் அவர்கள் வெகு தொலைவில் இருப்பதும், குறைவான சம்பளம் அளிப்பதும்தான் என்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தெரிவித்து இருக்கிறார்.
பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் உரிய கட்டமைப்பினைப் பெற்றிருக்கின்றனவா என்பதைக் கூட சோதிக்காமல், அந்த நிறுவனங்களை பதிவு செய்ததன் மூலம் அரசின் பணம், அதாவது மக்களின் பணம் விரயமாக்கப்பட்டு இருக்கிறது. இளைஞர்களின் ஆர்வம் கணிசமாக குறைந்து கொண்டே வருவதிலிருந்தும், இதற்கான வேலைவாய்ப்பு பிரகாசமாக இல்லை என்பதிலிருந்தும் இந்தத் திட்டம் ஒரு பயனற்ற திட்டம் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு திட்டத்தை அறிவித்து விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது, அந்தத் திட்டம் மக்களை சென்றடைகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.
முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, எந்தெந்த துறைகளில் பயிற்சி அளித்தால் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற முடியும் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.