காஷ்மீரில் நிலச்சரிவு; பலியான தமிழரின் உடலை கொண்டு வர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை சென்ற 10 பக்தர்கள் காயம் அடைந்தனர்.;
டேராடூன்,
ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் முக்கிய முகாமான கத்ராவில் கனமழை பெய்தது. இதனால், கத்ராவில் இருந்து வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் பங்கங்கா என்ற இடத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த பாதையை குதிரை சவாரி செய்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மலையில் இருந்து பாறைகள் திடீரென விழுந்ததில் பக்தர்கள் பலர் காயம் அடைந்தனர். மேலும் அந்த பாதையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் மீட்பு குழுக்கள் விரைவாக மீட்பு பணியை தொடங்கின.
நிலச்சரிவில் சிக்கி அந்த வழியாக யாத்திரை சென்ற 10 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஜார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் குப்பன் சீனிவாசன் (வயது 70) உயிரிழந்தார். அவரது மனைவி ராதா (66) சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பைஞ்ச்-கல்சைன் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியின் தகரக்கூரையில் ஒரு பெரிய பாறை உருண்டு விழுந்தது. இதில் 4 மாணவர்கள், ஒரு ஆசிரியர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.