கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி

திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.;

Update:2025-07-17 11:58 IST

சென்னை,

திமுக எம்.பி. திருச்சி சிவா தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜர் குறித்து கூறிய ஒரு தகவல் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா பேசும்போது, காமராஜர் ஏசி இல்லாமல் தூங்கமாட்ட்டார், ஏனென்றால் அவருக்கு அலர்ஜி இருந்தது, இதனால் அவருடைய உடல்நிலை கருதி காமராஜர் தங்கும் அரசு பயணியர் விடுதிகளில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் அரசு சார்பில் ஏசி வசதி செய்து கொடுக்கப்பட்டது என கூறினார். தங்களை எதிர்த்து தான் அரசியல் செய்கிறார் என்றாலும் அவருக்கான மரியாதையை திமுக கொடுத்தது என தெரிவித்தார். ஆனால், திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் நிர்வாகிகளும் திருச்சி சிவா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காமராஜர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். விவாதப் பொருளாக்கிட வேண்டாம். அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் இந்த சர்ச்சையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.

இந்தநிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை.ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.

வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் திமுக, கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தியுள்ளனர். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக காங். தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா? உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப் போட்டியிடத் தயாரா? கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதை நான் மட்டுமல்ல.. சாதாரண மக்களும் கேட்கிறார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்