முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மண்டல அளவில் அடுத்த மாதம் 22-ந்தேதி முதல் நடத்தப்படவுள்ளன.;
37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார்.
கடந்த 2024-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு 83.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த ஆண்டு (2025) முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025 (Chief Minister's Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in வாயிலாக 17.7.2025 முதல் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.8.2025 மாலை 6.00 மணி ஆகும்.
தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.