கடலூர் பள்ளி வேன் விபத்து - தமிழக அரசு, ரெயில்வே துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பள்ளி வேன் விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.;

Update:2025-07-17 15:59 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கடந்த 8-ந்தேதி ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது பள்ளி வேனுக்குள் 4 மாணவர்கள் மற்றும் டிரைவர் ஆகிய 5 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர். வேன் டிரைவரும், மற்றொரு மாணவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின்போது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே விபத்துக்கு காராம் என முதற்கட்ட தகவல் வெளியானது. அதே சமயம், தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததாகவும், அதனை திறக்குமாறு வேன் டிரைவர் வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் விபத்தில் உயிர்பிழைத்த மாணவர் கூறுகையில், ரெயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தெற்கு ரயில்வே சார்பில் முழு நிதியுதவியுடன் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் கடந்த ஒரு வருடமாக மாவட்ட கலெக்டர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்றும் தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூர் பள்ளி வேன் விபத்து சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விபத்து குறித்து 2 வாரங்களில் விரிவான விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, தமிழக டி.ஜி.பி., ரெயில்வே வாரிய தலைவர் மற்றும் ரெயில்வே அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் உண்மையாக இருந்தால், அது தீவிர மனித உரிமைகள் மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்களையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்