மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் நாட்டில் கடந்த 50 மாத காலமாக ஒரு அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழலை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. தற்போதைய அரசு முற்றிலும் செயலிழந்த அரசாக விளங்கி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு :
மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களுக்கு, வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகின்றன. குடிநீர் பிரச்சனையைப் போக்குவதற்கு குடிநீர் குழாய் மற்றும் கிணறு அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடையாமல்
கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்கு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியாரிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. அவர்கள் நான்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகளை அள்ளுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தராத நிலையில், சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையினாலும்; கழிவு நீர் கால்வாய் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தாலும், மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுகின்றனர்.
நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நகர் நல மையத்தில் உயிர் காக்கும் கருவி மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 23.7.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. பென்ஜமின் தலைமையிலும்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ளு. ஆறுமுகம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவருமான ம. தனபால், கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான மரகதம் குமரவேல், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மத்திய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும்; மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.