முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி
நேர்மையான அரசு அதிகாரியை திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட வாகனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றதாக தகவல் வெளியானது. இதனால், அவர் தனது வீட்டில் இருந்து காவல் சீருடையுடன் இவர் பணிபுரியும் காவல் நிலையத்துக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார். இது போலீசாரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,
மயிலாடுதுறை மதுவிலக்கு துறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வாகனம் வழங்கப்படவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி.அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி முக்கிய அலுவலுக்காக அவரது வாகனத்தை பெற்று மாற்று வாகனம் வழங்கப்பட்டது. இன்று மீண்டும் டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனமே வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் டிஎஸ்பி சுந்தரேசனின்யின் வாகனத்தை முன் அறிவிப்பு இன்றி அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.