இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - முத்தரசன்

விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்கவேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-18 14:30 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. உள்ளாட்சிப் பணிகளை தனியார் ஒப்பந்ததாரருக்கு மாற்றுவதை கைவிடுக!

உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள், மிக நீண்ட கால போராட்டங்களுக்கு பின்பு, அரசாங்கத்தின் கடை நிலை ஊழியர்களாக 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக, துப்புரவு பணிகளை படிப்படியாக தனியார் காண்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கும் முறையை அரசு கையாண்டு வருகிறது. இதன் மூலம், அவர்களின் பணிப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகபாதுகாப்பு அனைத்தும் பறிக்கப்படுகின்றன.

நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தை காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை.

இவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசாங்கம் நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அதைக்கூட வழங்காமல், பொதுப்பணித்துறை, குடிநீர்வடிகால் வாரியம், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் இவற்றில் எதுகுறைவோ அதனை வழங்குமாறு கான்ட்ராக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுருத்தியிருக்கிறது. எனினும் இதன் அடிப்படையில் கூட ஒப்பந்த சரத்துகளில் ஊதியம் உறுதி செய்வதில்லை, குறைந்த தொகைக்கு கேட்கும் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் தரப்படுகிறது, ஒப்பந்த ஷரத்துக்களில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையும் கூட குறைத்து வழங்குவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறை ஒப்பந்ததாரர் மாறும் போது மேலும் ஊதியம் குறைக்கப்படுகிறது. ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. வேலைப்பளு திணிக்கப்படுகிறது.

குப்பைகள் நிரந்தரமானவையாக இருக்கும் போது, அவற்றை அகற்றும் தொழிலாளர்களின் பணி தற்காலிகமானது என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. மிகப் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த இந்தத் தொழிலாளர்களைக் கைதூக்கிவிடுவதற்குப் பதிலாக, நிரந்தர தொழிலாளர்களான அவர்களை அற்றைக் கூலிகளாக்கி கீழே தள்ளுவது சமூக நீதிக்கு நேர் எதிரான செயலாகும். எனவே உள்ளாட்சி பணிகளை தனியார் காண்ட்ராக்டர்களுக்கு மாற்றுகிற தவறான கொள்கையை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு வலியுறுத்துகிறது.

2. சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்க! செயல்படுத்துக !!

84 தொழில்களுக்கு தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளது. 15வது முக்கூட்டு தொழிலாளார் மாநாட்டு முடிவுகள், டாக்டர் அய்க்ராய்டு சூத்திரம், ரெப்டகாஸ்பிரெட் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதே சட்ட நியதியாகும். ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில்லை. இந்தவகையில் கணக்கிட்டால் அகவிலைப்படியைச் சேர்த்து மாதம் 35,000 வரை வருகிறது. மிகப்பெரும்பாலான குறைந்தபட்ச ஊதியங்கள் மாதம் ரூபாய் 12,000 என்ற அளவிலேயே உள்ளன.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே கணக்கீடு செய்து வெளியிட்ட குறைந்தபட்ச ஊதிய ஆணைகளையே திரும்பப் பெறுவதும், அல்லது இன்னொரு குழு அமைத்து மேலும் குறைப்பதும் வாடிக்கையாகிறது.

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சஊதியம் நிர்ணயம் செய்வது சம்பந்தமாக 12 ஆண்டுகளாக அரசு பேசிக்கொண்டே இருக்கிறதே தவிர. இதுவரையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவே இல்லை. முதலாளிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுவது கொடுமையானதாகும்.

அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்கச் செய்வதும் அரசின் கடமையே ஆகும். அந்தக் கடமையையும் அமலாக்கத்துறை நிறைவேற்றுவதில்லை. அரசின் துறைகளும் கூட தம்மிடம் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க மறுக்கின்றன.

சட்ட நியதிகளின்படி, அறிவியல் பூர்வமான கணக்கீட்டின் அடிப்படையில், குறைந்தபட்ச ஊதியத்தை தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கவேண்டும் என்றும், அவற்றை அமலாக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

3. சென்னை- தூய்மை பணியாளர்கள் போராட்டமும் காவல்துறையின் அத்துமீறலும்

சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் பில்டிங் முன்பு இரண்டு மண்டலங்களைச் சார்ந்த 1253 தூய்மை பணியாளர்கள் வழக்கு நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அவர்கள் செய்து வரும் பணியை கார்ப்பரேட் வெளி முகமைக்கு விடக்கூடாது எனவும், தமிழக முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர்.

இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக ஒரு தனிநபரை வைத்து பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, சென்னையில் போராடும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவு பெற்று 13.08.2025 அன்று ஆயிரக்கணக்கான போலீசாரை வைத்து அப்புறப்படுத்தியுள்ளனர். அந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் எட்டு சட்டக் கல்லூரி மாணவர்களையும் கண்மூடித்தனமாக அடித்து, காயப்படுத்தி,சட்ட விரோத காவலில் வைத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பாக அவர்களை விடுவிக்கப்பட்டுள்ளனர் .

காவல்துறையின் அத்துமீறல் மற்றும் மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கையை இம்மாநாடு கண்டிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர தன்மை உள்ள தொழிலில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களையும், சமூக நீதிக்காக அற வழியில் போராடிவரும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26 வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.

4. சாவர்க்கரை தியாகியாக்கும் அவமானகரமான செயலுக்குக் கண்டனம்

இந்தியாவின் 79வது விடுதலைத் திருநாளான 2025 ஆகஸ்ட் 15ஆம் நாள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றை முற்றிலும் சிதைக்கும் வகையிலும், துரோகிகளை வீரர்களாகக் காட்டும் நோக்கத்துடனும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோர்களுடன் வி.டி. சாவர்கரின் படத்தையும் இணைத்து “இவர்கள் தந்த பரிசு சுதந்திரம்...” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது. தேசத்தின் நம்பிக்கையைக் காட்டிக் கொடுத்த சாவர்கரை, தியாகியாக்கும் ஆபத்தான முயற்சி இது.

பிரிட்டிஷ் அரசிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, கருணை மனு கொடுத்து, விசுவாசமிக்க ஊழியராக பணிபுரிவேன் என்று எழுதிக் கொடுத்து, விடுதலையாகி, மாதந்தோறும் பிரிட்டிஷ் அரசிடம் ஊதியம் வாங்கிப் பிழைத்து வந்த சாவர்கரை, உயிரையே தந்து விடுதலைக்காகப் போராடிய உண்மைத் தியாகிகளோடு ஒப்பிடுவது அவமானகரமானது.

இது ஏதோ தனித்து நிகழ்ந்த தவறல்ல; இந்துத்துவ சிந்தனையாளர்களை வீரர்களாகச் சித்தரிக்கும் தீய முயற்சியின் ஒரு பகுதியேயாகும். பொய்யை முன்னிறுத்தி, உண்மையை மறைக்கும் வகையில் அமைச்சகம் மேற்கொண்ட இந்தச் செயலை மாநாடு கடுமையாகக் கண்டிக்கிறது. அந்த அமைச்சகம் இதற்காக மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அந்த விளம்பரத்தை வடிவமைக்கச் செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இச்செயலில் தொடர்புடையவர்களை விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

5. சாதி, ஆணவப் படுகொலை

தமிழ்நாடு, இந்தியாவிலேயே கல்வி, உற்பத்தி என பல துறைகளில் முந்தி நின்றாலும், சாதி ஆதிக்கப்போக்கும், ஆணவக் படுகொலைகளும் பெரும் களங்கமாக நீடிக்கின்றன. குறுகிய அரசியல் காரணங்களுக்காக சாதியப் பெருமிதங்கள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக பட்டியலினத்தை சேர்ந்த ஆணும், பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்த பெண்ணும் காதலிக்கும் போது, அதைத் தடுக்கப் படுகொலை வரைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல ஆணவப் படுகொலைகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த வகையில் 58 படுகொலைகள் வரை நடந்திருப்பதாகக் கருதப்பட்டாலும், ஏழு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன அவற்றிலும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை தருவதும் குறைவு.

2016 உடுமலைப்பேட்டை, சங்கர் கொலை வழக்கில் மட்டுமே பெண்ணின் தந்தை சகோதரர் உள்ளிட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை அரிதாக வழங்கப்பட்டது.அதற்கு சம்பந்தப்பட்ட பெண் உறுதியாக இருந்தது காரணமாகும்.

2015 நாமக்கல் கோகுல்ராஜ் வழக்கில், நமது தோழர் மூத்த வழக்கறிஞர் ப. பா.மோகன் அவர்களின் விடாமுயற்சியின் காரணமாக, சாதிக் குழுவின் தலைவர் யுவராஜுக்கு தண்டனை கிடைத்தது.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த, கவின் செல்வ கணேஷ் படுகொலையில், பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள்! நன்கு படித்து, ஆறு இலக்க சம்பளம் பெறுகிற வேலை செய்த அந்த தலித் இளைஞனை கொலை செய்து விட்டு, தன் மகளின் விருப்பத்தைக் கருக்கி, படித்த மகனை கொலைக்கு தூண்டி. அவரது எதிர்காலத்தையும் சிறைக்குள் தள்ளும் அளவுக்கு சாதிய வெறி காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கே இருக்கிறது.

இத்தகைய படுகொலைகள் நடப்பதற்கு தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம்.வழக்குகளில் துரித தீர்ப்புகள் கிடைப்பதில்லை.சாதிய ரீதியான அழுத்தங்கள்.மிரட்டல் காரணமாக, சாட்சிகள் பிறழ்ந்து விடுகின்றனர். காவல் துறையிலேயே சாதிய வன்மம் உள்ளது. இந்தக் கொலைகளை தற்கொலைகளாகவும் விபத்துகளாகவும் பதிவு செய்து விடுகின்றனர். ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம், முழுமையாக செயல்படுத்தப்படுவது இன்றியமையாததாக உள்ளது. ஆனால் அது மட்டுமே போதாது.

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, வீடு, வேலை அனைத்தும் மறுக்கப்படுகின்றன. அவர்களை பாதுகாக்க தங்குமிடம், நிதி வசதி, வேலை ஆகியவற்றை உருவாக்கித் தந்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு தக்க திட்டங்களை வகுப்பது குறித்து அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.

தென் மாவட்டங்களில் போதிய வேலைவாய்ப்பின்மை நிலவுவதும் இதற்கு ஒரு காரணம்.நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் குழு பரிந்துரைப்படி, தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெறும் வகையில் தக்க திட்டமிடப்பட வேண்டும்.நீதிபதி சந்துரு குழு பரிந்துரைப்படி, சாதிய வன்மங்களைக் களைவதற்கு பள்ளிக் கல்வியிலிருந்தே விழிப்புணர்வு பரப்புரைகளும், நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு வலியுறுத்துகிறது.

6. நிலையாணை திருத்த சட்டத்தை செயல்படுத்துக

கலைஞர் ஆட்சிக் காலத்தில், ஒரு தொழிற்சாலையில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எத்தனை சதவீதம் இருக்கலாம் என நிலையாணை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழு ஆண்டு காலம் நிலுவையில் இருந்து குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தார். அஇஅதிமுக ஆட்சி அதைக் கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைத்த பின்னரும், நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்திற்கு விதிகளை உருவாக்கவில்லை. அது குறித்து பரிசீலிப்பதற்காக குழுக்களை அமைத்து, அவற்றை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகிறது.

நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிற, அமைப்பு சார்ந்த தொழில்களிலும் கூட காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் தொழிலாளர் எண்ணிக்கை எழுபது சதவீதத்துக்கும் அதிகமாகிவிட்ட சூழலில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தவிர்க்கக் கூடாத தேவையாகும். எனவே கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையாணை திருத்தச் சட்டத்திற்கு விதிகள் வரைந்து, உடனடியாக செயலாக்குமாறு தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் 26-வது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7. விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்கவேண்டும்

தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகளை சமூக,பொருளாதார அடிப்படையில் ஆய்வுசெய்து. மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1990 - 91ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் ஏற்று அறிவிக்கப்பட்ட தராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற நவதாராளமயக் கொள்கைகள் கிராமத் தொழிலாளர் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளையும் நெருக்கடியினையும் உருவாக்கியுள்ளது.

விவசாயவேலைகள், குறிப்பாக சாகுபடிப்பணிகள் அனைத்தும் அனேகமாக இயந்திரமயமாகி உடல் உழைப்புப்பணிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

வேலையிழப்புக்கு ஆளாகிவரும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு நவீன கருவிகளை இயக்கும் பயிற்சிகள் அளித்து திறன் மேம்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

விவசாயத்தில் வேலையின்மை அதிகரிப்பதால் நகர்மயமாதல் தீவிரமாகி வருகிறது அது நகரங்களில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் நிலவுடைமைகளிலும், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயத் தொழிலாளர் வேலை நிலைகளில் உருவாகியுள்ள புதியசூழல் குறித்தும். நிலமில்லாத, கிராமத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சுயமரியாதையுடன், கண்ணியமான வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தவேண்டும். அதற்கான வாய்ப்புகள், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்து. பரிந்துரைகள் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு விவசாயத் தொழிலாளர் சங்கப்பிரதிநிகளும் துறைசார்ந்த வல்லுநர்களும் கொண்ட ஒரு உயர்மட்டக்குழுவை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது தமிழ்நாடு மாநில மாநாடு அரசைக்கேட்டுகொள்கிறது.

8. தமிழ்நாட்டின் தொழிலாளர் கொள்கையை வெளியிடுக!

இந்திய தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டுகளுக்கு மேலாக போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை பறித்து நான்கு சட்டத்தொகுப்புகளாக மத்திய மோடி அரசு மாற்றி உள்ளது. இவற்றை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

நான்கு சட்டத்தொகுப்புகளில் மூன்றுக்கு தமிழ்நாடு அரசு வரைவு விதிகளை வெளியிட்டு இருந்தாலும், இதுவரை எதையும் இறுதிப் படுத்தவில்லை. ஆனாலும் அந்தத் சட்டத் தொகுப்புகளில் உள்ள தொழிலாளர் விரோத அம்சங்கள் தமிழ்நாட்டில் படிப்படியாக அமலாக்கி கொண்டிருக்கின்றன. பணி நிரந்தரம் என்பதே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த தொழில்களில், நிரந்தரத் தன்மையுள்ள பணியிடங்களில், ஒப்பந்ததாரர் வழியாகவும், வெளி முகமை (அவுட்சோர்சிங்) என்ற பெயரிலும் நிரந்தரமற்ற தொழிலாளர்களே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எத்தனை ஆண்டு காலம் பணிபுரிந்தாலும் அவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறை ஒப்பந்ததாரர் மாறும் போதும், இவர்களது ஊதியம் குறைக்கப்படுகிறது, வேலைப்பளு அதிகரிக்கப்படுகிறது. எப்போதும் வேலையை விட்டு துரத்தப்படும் அபாயம் அவர்கள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றையும் தாண்டிப் பல ஆண்டுகள் பணிபுரிந்து, வயது முதிர்ந்த நிலையில், வேலையில் இருந்து வெளியேற்றப்படும் போது பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த ஓய்வு காலப் பலன்களும் இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இவர்களை நிரந்தரமாக்கி ஊதியப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நலன்களும் வழங்கினால், அரசாங்கத்தின் செலவு அதிகமாகி, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று, அனைத்து பாதுகாப்புகளோடும் லட்சக்கணக்கான ரூபாய்களை ஊதியமாகப் பெறும் அதிகாரிகள் சொல்வதுதான் வேடிக்கை!

‘முன்மாதிரி முதலாளி’ (மாடல் எம்ப்ளாயர்) எனப்படும் அரசின் நிலையே இவ்வாறு இருக்கும் போது, இவரைகளையும் தாண்டி பல மடங்கு அதிகமாக தனியார் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டி கொழுக்கிறார்கள்.

சம வேலைக்கு சம ஊதிய சட்டம், குறைந்த பட்ச ஊதிய சட்டம், நிரந்தரப்படுத்தல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை அமலாக்க தொழிலாளர் துறையில் அதிகாரிகள் உண்டு. ஆனால் அந்த தொழிலாளர் துறையிலேயே இத்தகைய தினக்கூலித் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்! தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில், அரசின் புள்ளியியல் துறை ஆவணங்களின்படி சுமார் மூன்று கோடியே முப்பது லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்களில் சுமார் பத்து லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள வாழ்வூதியம் வழங்கப்படுகிறது. மூன்று கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் மாதம் ரூ. 12,000/ வரை மட்டுமே ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக ஊரக உள்ளாட்சி துறை, மருத்துவ துறை, பள்ளி கல்வித் துறை போன்ற துறைகளில் ரூ. 1000/ முதல் 5000/- வரையிலான ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.

இது தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிற சமூக அநீதியாகும். தமிழ்நாட்டை தொழில் வளம் நிறைந்த, வலுவான பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் அதனை தொழிலாளர்களுடைய உரிமைகளை மறுத்து, கடும் சுரண்டலுக்கு உட்படுத்தித்தான் செய்ய முடியும் என்ற நிலை கவலைக்குரியது, கண்டிக்கத்தக்கது.

‘தொழில் நடத்துவதை எளிமையாக்குவது’ என்ற பெயரில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து, முதலாளிகளின் விருப்பம் போல தொழிலாளர்களை மனிதத் தன்மையற்ற கொடூரமான சுரண்டலுக்கு ஆளாக அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல. கார்ப்பரேட் முதலாளிகளும், பாசிச. வலதுசாரி பாஜகவின் மத்திய அரசும் அழுத்தம் தந்து வலியுறுத்துகிற இத்தகைய கொள்கைகளையே, மாற்றம் இன்றி தமிழ்நாட்டின் செயல்படுத்துவது, திராவிட மாடல் அரசின் நடைமுறையாக இருக்க முடியாது.

மத்திய அரசு திட்டக்குழுவைக் கலைத்து, நிதி ஆயோக் அமைத்து நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளில் தந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழி காட்ட திட்டக்குழுவை அமைத்து, முன்னேறத் திட்டமிட்டு செயல்படுகிறது. உழைக்கும் மக்கள் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தொழிலாளர்கள் சுயமரியாதையோடு வாழத் தக்க ஊதியம், பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என அனைத்தையும் பறித்து விட்டு, நலத்திட்டங்களை மாற்றாக முன்வைப்பது தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய உதவாது.

தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்து, நலம் பேணுவதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்க வேண்டும். தொழிற் கொள்கை, கல்விக் கொள்கை என தமிழ்நாடு அரசாங்கத்தின் கொள்கை நிலைகளைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், தொழிலாளர் குறித்தும் தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

உயர்மட்ட முத்தரப்பு அமைப்பான மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவில் விவாதித்தும், தொழிற்சங்கங்கள், தொழில் உறவு, மனித உரிமை, புள்ளியியல் துறைகள், மற்றும் இவை தொடர்பான வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்தும், பரிந்துரை பெற்று ஆய்வு செய்து, தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான ‘தமிழ்நாடு தொழிலாளர் கொள்கை”யை உருவாக்கி, வெளியிட்டு, செயல்படுத்திட பொருத்தமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ் மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்