ஈரோட்டில் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்புக்காக 'போலீஸ் அக்கா' திட்டம் தொடக்கம்
மாணவிகளுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கும் நேரடியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா'(Police Akka) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா கலந்து கொண்டு 'போலீஸ் அக்கா' திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த திட்டத்தின் நோக்கம் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல், குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்தல், தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகும்.
மேலும் பெண் போலீசாரை நியமித்து மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கும் நேரடியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. போலீஸ் துறையை எந்தவித தயக்கம், பயமின்றி சுலபமாக அணுகும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.