"திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.." - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

தி.மு.க.வுடனான கள்ள உறவை ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-04 04:14 IST

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டாரே?

பதில்:- ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அழிந்துவிட்டார். தி.மு.க.வோடு கள்ள உறவு வைத்திருந்தவர். சட்டசபையிலேயே ஒருமுறை பேசும்போது, கருணாநிதி போட்டோவை, தனது அப்பாவின் புகைப்படத்துடன் வைத்து சாமி கும்பிட்டு விட்டுதான் மற்ற வேலையை செய்வோம் என்று அவர் சொன்ன அன்றே, அவர் கள்ள உறவில் இருந்தது தெரிந்துவிட்டது. அந்த கள்ள உறவை இன்று உறுதிபடுத்தி இருக்கிறார். இது எங்களுக்கு லாபம், அவருக்கு அழிவு. ஓ.பன்னீர்செல்வம் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார், கள்ள உறவுக்காரர் என்ற பட்டத்தையும் கட்டிக்கொண்டார்.

கேள்வி:- எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் பிரதமர் மோடி தன்னை சந்திக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறாரே?

பதில்:- அது உண்மை இல்லை. செல்லாக் காசாக கடலில் மூழ்கிவிட்ட ஒரு துரோகி என்ற பட்டத்தை பெற்றவர் அவரைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?

கேள்வி:- கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய உள்ளனவா?

பதில்:- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணி குறித்து பேசுவார். அதற்கான அதிகாரத்தை எங்கள் 2 கோடி தொண்டர்களும் அவருக்கு கொடுத்திருக்கிறோம். தன்னிகரற்ற தலைவர், தனியாட்சி அமைக்கின்ற மாமனிதராக அவரை மக்கள் அறிவார்கள்.

கேள்வி:- பா.ஜனதா ஆபத்தான கட்சி என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளாரே?

பதில்:- பண்ருட்டி ராமச்சந்திரன் பல கட்சிகள் மாறியவர். பல கொள்கைகளுக்கு ஆதரவானவர் அதுகுறித்து பேசி பயனில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்