சென்னையில் புதிய கொள்ளை கலாசாரம்: 'ஜிபே' மூலம் பணம் பறிக்கும் கும்பல்

சென்னையில் வழிப்பறி யுக்தியை மாற்றி ‘ஜிபே’ மூலம் பணத்தை பறிக்கும் கும்பல் சிக்கியுள்ளது.;

Update:2025-08-03 21:47 IST

கோப்புப்படம் 

சென்னையில் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் தற்போது தங்களது யுக்தியை மாற்றி பணம், பொருளை கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு 'ஜிபே' மூலம் தங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றும் நூதன முறையை கையாள தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் போலீசார் எளிதில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் 'ஜிபே' மூலம் பறிக்கும் பணத்தை உடனடி செலவுக்கு பயன்படுத்துவதற்கு வசதியாக இருப்பதால் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகிறார்கள்.

சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 'ஜிபே' மூலம் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர் பெயர் ஜெய்னூல் அனீப் (28 வயது). ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வசித்து வரும் இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1-ந்தேதி இரவு ஆயிரம் விளக்கு காளியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார். அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பர்களை பார்த்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது அங்கு வந்த சில மர்மநபர்கள் ஜெய்னூல் அனீப்பை வழிமறித்து மிரட்டி இருக்கிறார்கள். அவரை பயமுறுத்தி அவரது நண்பர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜெய்னூல் அனீப்பின் நண்பர்களை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் 'ஜிபே' மூலம் தங்கள் வங்கிக்கணக்கிற்கு பணத்தை மாற்றி நூதனமாக கொள்ளையடித்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். அவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை ஆசாமிகள் 8 பேரை கண்டறிந்து கைது செய்தனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

1. வசந்த் (25 வயது) -ஆயிரம்விளக்கு, 2. அபிஷேக் (21 வயது) - சைதாப்பேட்டை, 3. ரித்திஷ் (19 வயது) - ஆயிரம் விளக்கு, 4. ஜான் டேவிட் (20 வயது) - சேத்துப்பட்டு, 5. டி.செல்வா (23 வயது) - ராயப்பேட்டை, 6. நிதின் கார்த்திக் (20 வயது) - திருவல்லிக்கேணி, 7.ராகவ் (19 வயது) - சேத்துப்பட்டு, 8.ஹரிஷ் (23 வயது) - கும்பகோணம்.

அவர்களிடம் இருந்து ஒரு கார், 5 செல்போன்கள் மற்றும் 2 கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் வசந்த் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 23 வழக்குகள் உள்ளன. அபிஷேக், ரித்திஷ் ஆகியோர் மீது தலா 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்