அ.தி.மு.க. சார்பில் 6-ந்தேதி மீஞ்சூரில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்படாத காரணத்தால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. அந்தவகையில், திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர். இங்கு மழைநீர் வடிகால்வாய் இல்லாத காரணத்தால், மழைக் காலங்களில் தேங்கும் மழை நீரினால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், மீஞ்சூர்-காட்டூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்படாத காரணத்தால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
எனவே மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 6-ந்தேதி மீஞ்சூர் பேரூராட்சி பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதற்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.