கொலை செய்யப்பட்ட குறும்பட ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது: யார் இந்த சரவணமருது..?
சிறந்த குறும்பட ஒளிப்பதிவுக்கான தேசிய விருது மதுரையை சேர்ந்தவருக்கு அறிவிக்கப்பட்டது.;
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர், சரவணமருது சவுந்தரபாண்டி (வயது 28).. இவர் சினிமா ஒளிப்பதிவாளராக முயற்சி செய்து வந்தார். குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
'சனிப்பிணம்' என்ற சிறுகதையை வைத்து 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. அதன் ஒளிப்பதிவாளராக சரவணமருது மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் பணியாற்றினர்.
இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென சரவண மருது மாயமானார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் சரவணமருது கொல்லப்பட்டதும், அவரது உடல் கீரனூர் பகுதியில் கண்மாய் பகுதியில் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது. பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த குறும்பட ஒளிப்பதிவுக்கு லிட்டில் விங்ஸ் படம் தேர்வானது. அந்த விருதை பெற சரவணமருது உயிரோடு இல்லை.
2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டவருக்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மதுரையில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.