"தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. இணைந்தால்.." - கருத்து தெரிவித்த திருமாவளவன்

யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் தெரிவித்தார்.;

Update:2025-08-03 23:49 IST

கோப்புப்படம்

சென்னை,

சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திராவில் உள்ள மதனபள்ளியில் வி.சி.க. மாநில பொதுச்செயலாளர் சிவபிரசாத் பராமரித்து வந்த புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த சிவபிரசாத் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, சிவபிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,

புத்தர் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயவாடாவில் வரும் 23-ந்தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா இங்குள்ள கட்சிகளுடனும், சாதிய, மதவாக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட தொடங்கிய பின்னர் தான் வன்முறைகளும், ஆணவக் கொலைகளும் அதிகரித்துள்ளது. நெல்லையில் கவின் என்ற என்ஜினீயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு அதை மாற்ற வேண்டும். ஐகோர்ட் கண்காணிப்பின் கீழ் அதை விசாரிக்க வேண்டும். ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. கவின் படுகொலைக்கு பா.ஜனதாவினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆணவக் கொலைகளை ஊக்கப்படுத்துகிறார்கள். பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து விரிவாக விவாதிக்க தமிழக முதல்-அமைச்சர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். சாதிய கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். தி.மு.க. கூட்டணி பலவீனமாக இருப்பதால் மேலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். அதேநேரம், யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு. ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. போன்றோர் கூட்டணிக்கு வந்தால் அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும், நெருக்கடி கிடையாது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்