குரோமியம் கழிவு தாக்கத்தால் பொது மக்களுக்கு நோய் பாதிப்பு - அன்புமணி பேச்சு

நச்சு கழிவுகள் உள்ள இந்த குடிநீரை குடித்தால் எப்படி மக்கள் உயிர் வாழ முடியும் என அன்புமணி தெரிவித்துள்ளார்;

Update:2025-08-03 23:59 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' எனும் தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ராணிபேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, மூடப்பட்டு கிடக்கும் குரோமியம் தயாரிக்கும் ஆலையை பார்வையிட்டு, ஆலையில் உள்ள கழிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது,

ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த குரோமியம் உற்பத்தி செய்யும் கம்பெனி, கடந்த 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால், அதற்குள் லட்சக்கணக்கான டன் ழிவுகள் அப்படியே உள்ளன.அவற்றை அகற்ற தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியும் கூட அதனை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது. அந்த பகுதி அமைச்சர் காந்தியும், இந்த கழிவுகளை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குரோமிய கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து, புற்று நோயையும் பல்வேறு உடல் சார்ந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. தற்போது நாம் குடிக்கின்ற நீரில் அனுமதிக்கப்பட்ட குரோமியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 0.05 சதவீதம். ஆனால் இந்த குரோமியம் தயாரிக்கும் நிறுவனம் அமைந்திருக்கக்கூடிய சுற்றுவட்டார பகுதியில், 700 ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய ஒரு லிட்டர் குடிநீரில் கலந்திருக்கும் குரோமியத்தின் அளவு, 277 மில்லிகிராம் அளவுக்கு உள்ளது.

இவ்வளவு நச்சு கழிவுகள் உள்ள இந்த குடிநீரை குடித்தால் எப்படி மக்கள் உயிர் வாழ முடியும்.

குரோமியம் கழிவுகள், காற்றின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் நாள்தோறும் கலந்து மக்களின் உயிரை பறிக்கக் கூடிய நிலையில் உள்ளது. ஆண்மை குறைவு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் பிரச்சினை போன்ற பலவிதமான பிரச்சினைகள் இந்த பகுதி மக்களுக்கு ஏற்படுகிறது. தி.மு.க. ஆட்சி செய்வதற்கான தகுதியை இழந்து விட்டது. தன் மக்களை கொலை செய்து கொண்டிருக்க கூடிய இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த குரோமியம் கழிவுகளை இங்கிருந்து அகற்ற ரூ.700 கோடி வரை செலவாகும் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு வார காலத்திற்குள் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். மேலும், பாலாற்றை காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தெரிவித்தார் .

Tags:    

மேலும் செய்திகள்