கோவில்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் புதுக்கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகர் 1-வது தெருவை சேர்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ்பாண்டி (வயது 25), தொழிலாளி. இவர் வேலாயுதபுரத்தில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், புதுக்கிராமத்தை சேர்ந்த நாகூர்மீரான் மகன் சௌபர்சாதிக்கிற்கும்(25) முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவரும், சகோதரர் பெரியசாமியும் நேற்று முன்தினம் இரவு புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகர் கோவில் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமான மது போதையில் அங்கு வந்த சௌபர்சாதிக்கும், அவரது நண்பரான பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் வெங்கடேஷூம்(26), கணேஷ்பாண்டியை திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதை பெரியசாமி கண்டித்து சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்தவாறு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த கணேஷ்பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சௌபர்சாதிக்கை நேற்று கைது செய்தனர். அவரது நண்பரான வெங்கடேஷை(26) போலீசார் தேடி வருகின்றனர்.