மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது
மதுரை மாநகராட்சி சொத்து முறைகேடு வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
மதுரை,
மதுரை மாநகராட்சியில் நடந்த, ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
வழக்கில் ஏற்கனவே ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இம்முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரிக்கிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.