தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு - டி.டி.வி. தினகரன் தாக்கு

காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2025-07-27 00:09 IST

கோப்புப்படம் 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் கடந்த 18-ம் தேதி அடையாளம் தெரியாத போதைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், குற்றவாளிகளை இதுவரை கண்டறிய முடியாத காவல்துறையால், தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பட்டப்பகலில், வீடுகளில், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், காவல்நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

எனவே, காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, தமிழகத்தின் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை, கூலிப்படைகளின் அராஜகம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்