குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை - அண்ணாமலை

பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-23 16:44 IST

சென்னை,

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட.

அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்