சென்னை லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை லாரி டிரைவர் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2025-07-24 05:08 IST

விக்கிரவாண்டி,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மகன் சப்தகிரி (வயது 32). இவர், சென்னை மதுரவாயலை சேர்ந்த முட்டை மொத்த வியாபாரி செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருவதற்காக செல்வராஜ் நிறுவனத்தில் இருந்து சப்தகிரி ரூ.10 லட்சத்தை பெற்று, டிரைவர் இருக்கையின் அடியில் வைத்துக்கொண்டு சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு லாரியில் புறப்பட்டார். அதிகாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு, இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுவிட்டு, மீண்டும் லாரியை எடுக்க வந்தார்.

அந்த சமயத்தில் வெள்ளை நிற காரில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென லாரியில் ஏற முயன்ற சப்தகிரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். அப்போது மர்மநபர்களில் ஒருவர் சப்தகிரியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மற்றொரு நபர் லாரியில் டிரைவரின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு, தாங்கள் வந்த காரில் ஏறி திருச்சி மார்க்கமாக தப்பிச்சென்று விட்டனர்.

கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை பறிகொடுத்த சப்தகிரி இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பணம் கொள்ளையடித்த விவகாரத்தில் லாரி டிரைவர் சப்தகிரிக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், காரில் தப்பிச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்