'டிஜிட்டல் கைது' செய்ததாக கூறி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி - 2 பேர் கைது
வீடியோ அழைப்பு மூலம் போலீஸ் சீருடையில் 2 பேர் தோன்றி தங்களை போலீசார் என தெரிவித்தனர்.;
தென்காசி,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரை சம்பவத்தன்று செல்போனில் தொடர்பு கொண்ட நபர், பண மோசடியில் உங்களுக்கு தொடர்புள்ளதாகவும், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஷ்ரப், நான் அப்படி எதுவும் மோசடி செய்யவில்லை எனக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால் அஷ்ரப்புக்கு தொடர்ந்து வீடியோ கால் வந்துள்ளது.
அதனை எடுத்து பேசியபோது, எதிர் முனையில் போலீஸ் சீருடையில் 2 பேர் தோன்றினர். அவர்கள் பேசுகையில், உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ரூ.20 லட்சத்தை நாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும். விசாரணை முடிந்ததும் அந்தப் பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பித் தந்து விடுவோம் என்றனர்.
மேலும் வங்கி கணக்கு தகவல்களையும் அளித்தனர். இதனால் பீதியடைந்த அஷ்ரப் வீடியோ காலில் வந்த போலி போலீசார் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு ரூ.20 லட்சத்தை செலுத்தியுள்ளார். எனினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் திருப்பித் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஷ்ரப் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அஷ்ரப் செலுத்திய ரூ.20 லட்சம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டியைச் சேரந்த பேச்சிகுமார் (வயது 27) என்பவருடைய வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டிருந்த்து தெரிய வந்தது.
இதையடுத்து உடனே திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்று பேச்சிகுமாரை பிடித்து விசாரித்தனர். அதில், கடையம் பெரும்பத்தை சேர்ந்த கிரிப்சன் என்பவர் கூறியதால் இந்த மோசடியில் ஈடுபட்டதாக பேச்சிகுமார் போலீசாரிடம் கூறினார். பேச்சிகுமாரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தியதற்காக அவருக்கு குறிப்பிட்ட தொகையை கிரிப்சன் கமிஷனாக கொடுத்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
வங்கிக்கணக்கு மூலம் மோசடி செய்த பணத்தை கிரிப்சன் ரூ.1 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் செலுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பேச்சிகுமாரை கைது செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் கிரிப்சனையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரையும் கேரளாவுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதையடுத்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.