தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2025-07-26 12:43 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443-வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இந்த திருப்பலி முடிந்ததும் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. பனிமய மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியுருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் 'மரியே வாழ்க' என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர். பின்னர் சமாதானச் சின்னமாக வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழாவில் வருகிற 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குதந்தை ஸ்டார்வின், உதவி பங்குதந்தை பிரவீன் ராசு, மிக்கேல் அருள்ராஜ் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

இந்த திருவிழாவையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக நேற்று பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து 6 மணியளவில் திருச்சிலுவை சிற்றாலயம் முன்பிருந்து தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்