உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கை... மதுபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர்

சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.;

Update:2025-07-26 12:19 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த பி.முட்லூர், எம்.ஜி.ஆர். சிலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலையில் இந்த மதுக்கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கடலூர் அருகே உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த காவியா என்ற கவியரசன்(வயது 40) என்பது தெரியவந்தது.

திருநங்கையாக மாறுவதற்கு முன்பு இவர் 20 வயதில் மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ளனர். 30 வயதுக்கு பிறகு திருநங்கையாக மாறிய கவியரசன் தனது பெயரை காவியா என மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரை யாரோ மர்ம நபர் மதுபாட்டிலை உடைத்து குத்தியும்,கழுத்தை நெரித்தும் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்த நபர் யார்? எதற்காக அவர் கொலை செய்தார் என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை?

இதையடுத்து காவியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கொலை செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது காவியாவை கொலை செய்தது பி.முட்லூரை சேர்ந்த மணிகண்டன் மகன் வசந்தராஜா(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது வசந்தராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

கூலி வேலை செய்து வரும் நான் நேற்று முன்தினம் இரவு மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த திருநங்கை காவியாவிடம் ரூ.200 கொடுத்து உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவள் வர மறுத்ததோடு காலால் என்னை எட்டி உதைத்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து அவளது வயிறு மற்றும் தோள்பட்டையில் குத்தினேன்.

பின்னர் காலால் எட்டி உதைத்து கழுத்தை நெரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டேன். அவள் இறந்து இருக்கமாட்டாள் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் நேற்று காலையில் தான் காவியா இறந்து போனது எனக்கு தெரியவந்தது. பின்னர் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்