"கீழடி தவிர்க்க முடியாத வரலாறு" - பிரதமர் தமிழ்நாடு வரும் நிலையில் திமுக வெளியிட்ட வீடியோ

பிரதமர் மோடி மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.;

Update:2025-07-26 17:33 IST

சென்னை,

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ள நிலையில் கீழடி குறித்த ஒரு வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வணக்கம் நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன். புதைந்து கிடந்த எங்கள் நாகரிகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள். கீழடி நாகரிகம் வெளியில் வரவர தமிழர் நாகரிகத்தின் மற்றுமொரு தொன்மையை உலகமே அறிய தொடங்கியது. ஹரப்பா, மொகஞ்சதாரோ போல தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டது.

தமிழனின் உயர்வான நகர நாகரிகம் உலகுக்கே தெரியவந்தது. தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு. 300 என அனைவரும் நினைத்திருந்த நிலையில் கி.மு. 600 என எங்கள் கீழடியால் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தான் தொடங்குகிறது என்பது நிறுபனமானது. உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொன்மத்தை அங்கீகரித்தனர். இத்தனை சிறப்புகளை கொண்ட எங்கள் கீழடியை உலகமே உற்று கவனிக்கிறது. கீழடி வரலாறு ஒரு நாள் நிச்சயம் வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்