பீகார் வாக்காளர்கள் நீக்கம்: 'நெருப்புடன் விளையாட வேண்டாம்" - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அநீதியை நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள், மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்களை நீக்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"சிறப்பு தீவிர திருத்தம் (#SIR) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது.
எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும். தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும். இந்த அநீதியை நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.