21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ஆசிரியர் கோவை மத்திய சிறையில் உள்ள நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அந்தப் பள்ளியில் 6 வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அந்த அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது உடலில் நல்ல தொடுதல், (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். இதேபோல் பல மாணவிகளும் ஆசிரியர் செந்தில்குமார் தங்களின் மார்புப் பகுதி மற்றும் உடலின் பின்புறம் உள்பட பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்றனர்.
மேலும் ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு அவர் முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. முடிவில் பள்ளியில் படித்த 21 மாணவிகள் செந்தில்குமார் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் ஊட்டி ஊரக ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் செந்தில்குமார், நீலகிரி ஆட்சியரின் பரிந்துரையின் கீழ் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியர் செந்தில்குமார் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
குண்டர் தடுப்புச் சட்டம்' என்றால் என்ன?
குண்டாஸ் சட்டம் என்பது குண்டர் சட்டம் ஆகும் 1982 ம் ஆண்டு எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் வழங்கப்படாது. அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.
அதேநேரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என்றும் சட்டத்தின் ஷரத்து கூறுகிறது.