நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது - பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்திற்கான ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி வந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள விமான நிலையத்தில் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், தமிழகத்திற்கான ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
அனைவருக்கும் வணக்கம். இன்று கார்கில் வெற்றி தினம். இன்றைய தினத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அயல்நாட்டு பயணங்களில் வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா மீது உலகத்திற்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் பூமியில் கால்பதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
பகவார் ராமர் மற்றும் முருகப்பெருமான் அருளால் தூத்துக்குடி வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான பயணம் 2014-ல் தொடங்கியது. வளர்ச்சியடைந்த பாரதம் படைப்போம். வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. தமிழகத்தில் இன்று ரூ.4,900 கோடி மதிப்பில் ரெயில்வே, எரிசக்தி, சாலைகள், விமான நிலையம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மகாகவி பாரதியாரும் இதே மண்ணில் பிறந்தவர்தான். அவர் தூத்துக்குடியை போல் காசியையும் நேசித்தார். வ.உ.சிதம்பரனாரின் தொலைநோக்கு சிந்தனை போற்றுதலுக்கு உரியது. அவர் ஆங்கிலேயருக்கு எதிராக சவால் விட்டு கப்பலை இயக்கினார். கட்டபொம்மனும், அழகுமுத்துக்கோனும் சுதந்திரத்திற்காக போராடினர். பாண்டிய நாட்டு முத்துகள் பொருளாதார வல்லமையின் அடையாளமாகும்.
புதிய பொருளாதார திட்டத்தின் மூலம் இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும். இங்கிலாந்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம் அளிக்கும். தடையில்லா வர்த்தகத்தால் இங்கிலாந்தில் விற்கப்படும் இந்திய பொருட்களுக்கு வரி கிடையாது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் சிறு, குறு தொழில்துறையினர் நன்மையடைவார்கள்.
உள்கட்டமைப்பு, எரிசக்தி ஆகியவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக திகழ்கின்றன. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம். இந்தியாவின் வளர்ச்சியில் உலகம் வளர்ச்சியை காண்கிறது."
இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்.